விசுவாச அறிக்கை

பரிசுத்த வேதாகமம் எங்களுடைய விசுவாசத்திற்கும் நன்னடத்தைக்கும் சகல விதத்திலும் போதுமான வழிகாட்டியாகவும் எல்லாக்காரியங்களிலும் உறுதியும் இறுதியுமான அதிகாரமுமாகும். எனவே இச்சபையின் சகல அங்கத்தவர்களும் கீழ்வரும் ஒரே காரியத்தைப்பேசி, கீழ்ப்படிந்து பின்பற்றக்கடவர்கள்.
(அப். 2:42, 1 கொரி. 1:10)

1. வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டவை. பரிசுத்த வேதாகமம் மனிதனுக்கு தேவனால் கொடுத்த வெளிப்படுத்தலாகும். அது நம்முடைய விசுவாசத்திற்கும், நடத்தைக்கும் வழிகாட்டும் தவறாத பிரமாணமாகும். அது மனச்சாட்சிக்கும் காரணகாரியத்திற்கும் மேலானது ஆனால் காரணகாரியத்திற்கும் எதிரானதல்ல.
( 2 தீமோ. 3:15,16.  1 பேதுரு. 2:3.  2 பேதுரு. 1:21.)

2. ஒன்றான மெய்த்தேவன்:
ஒன்றான மெய்த்தேவன் தம்மை நித்தியத்திற்கும் தற்பிரசன்னராகவும் சுய வெளிப்பாடுடையவராகவும் “நானே” எனும் பதத்தின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற ஒற்றுமையிலும், உறவிலும் இணைந்த ஒரு கோட்பாட்டில் தம்மை வெளிப்படுத்துகிறார்.
(உபா. 6:4.  ஏசாயா. 43:10.  மத். 28:19.  மாற். 12:29.)

3. மனிதன், அவனது வீழ்ச்சி, மீட்பு:
தேவன் மனிதனைத் தமது சாயலாகவும், ரூபத்தின்படியும் சிருஸ்டித்தார். அவன் நல்லவனாகவும், நேர்மையானவனாகவும் சிருஸ்டிக்கப்பட்டான். ஆனால்   தன்னிச்சையான மீறுதலினால் வீழ்ச்சியடைந்தான். அவனுடைய மீட்பின் ஒரே நம்பிக்கை தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து.
( ஆதி. 1:26-31.  அப். 4:12.  ரோமர;. 5:12-21.)

4. மனிதனின் இரட்சிப்பு:

அ) இரட்சிப்புக்கான நிபந்தனை:
இரட்சிப்பைக் கொண்டுவருகிறதான தேவகிருபையானது தேவனிடத்தில் மனந்திரும்புவதற்கான பிரசங்கத்தினாலும், இயேசுக்கிறிஸ்துவில் உள்ள   விசுவாசத்தினாலும் சகல மனிதருக்கும் வெளிப்பட்டது. மனிதனானவன் மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலினாலும்     விசுவாசத்தைக்கொண்டு நிதிமானாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி தேவனுடைய சுதந்திரவாளியாகின்றான்.
( லூக். 24:47.  ரோம. 10:13-15.  தீத்து. 2: 11, 3:5-7.)

ஆ) இரட்சிப்பின் அத்தாட்சி:
விசுவாசியின் இரட்சிப்பின் அத்தாட்சியானது பரிசுத்த ஆவியானவரின்  நேரடி சாட்சியாகும். ரோமர் 8:16. நீதியும் பரிசுத்தமுள்ள ஜீவியமானதே எல்லா மனிதருக்கும் வெளியரங்கமான சாட்சியாகும்.

5. முழுக்கு ஞானஸ்நானம்:
உண்மையாகவே மனந்திரும்பிக் கர்த்தராகிய இயேசுவைத் தங்களுடைய இருதயத்தில் சொந்த இரட்சகராகவும், கர்த்தராகவும் எற்று விசுவாசிக்கிற யாவரும்  வேதவசனங்களிலே கட்டளை இட்டிருக்கிற பிரகாரமாக இயேசுவோடு கூட தம் பாவங்களுக்காக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுதலே ஞானஸ்நானத்தின் நியமமாயிருக்கிறது. தண்ணீரிலே அமிழ்த்தப்படும்போது தாங்கள் இயேசுக்கிறிஸ்துவுடன் கூட அடக்கம்பண்ணப்பட்டதாகவும், எழும்பும் போது அவரோடுகூட புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு எழுந்திருப்பதாக உலகிற்கு பிரகடனப்படுத்துகிறார்கள். அப்படிச் செய்யப்படும் போது வெளியரங்கப் பரிசுத்தத்திற்கு  அடையாளமாக உடம்பு சுத்த நீரினால் கழுவப்படுகிறது போல உட்பிரகாரமாகவும் இருதயம் இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஏற்கனவே கழுவப்பட்டிருக்கிறது.
( மத். 28:19.  அப்போ. 8:36-38, 10:47, 20:21. 22:16, எபி. 10:22.)

6. கர்த்தருடைய பந்தி (திருவிருந்து)
கர்த்தருடைய பந்தி அப்பத்தையும், திராட்சைப்பழ ரசத்தையும் கொண்டதாக இருக்கிறது. அது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்தில்  நாம்  பங்காளிகளாக இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. (2 பேதுரு 1.4) அது அவருடைய பாடுகளையும், மரணத்தையும் நினைவூட்டுகிறது. அத்தோடு  இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம்வருகையின் தீர்க்கதரிசனமாகவும் இருக்கிறது. 1 கொரி. 11:26 இன்படி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டு முழுக்கு ஞானஸ்நானத்தில் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து பரிசுத்த வாழ்க்கை நடத்துபவர்கள், இயேசுவின் வருகைபரியந்தம் இதில் பங்குகொள்ளத் தகுதியுடையவர்களாக  இருக்கிறார்கள்.

7. பிதாவின் வாக்குத்தத்தம்: (பரிசுத்தாவியின் அபிஷேகம்)
நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் கட்டளைப்படி சகல விசுவாசிகளும் பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகத்திற்கு  உரிமையாளிகள் ஆனதால் அதை ஆவலுடன் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கவும், உண்மையுடன் வாஞ்சிக்கவும் வேண்டும். இது ஆதிக் கிறிஸ்தவ சபைக்கு ஒரு வழக்கமான அனுபவமாயிருந்தது. இதன் மூலமாகவே வாழ்க்கைக்கும், ஊழியத்திற்கும் வல்லமையும் கிடைக்கிறது. இதனைத்தொடர்ந்து தேவ சேவைக்காக ஆவியின் வரங்களும், அதன் கிரியைகளும் அருளப்படுகின்றன. (லூக்கா. 24:49, அப். 1:4-8, 1 கொரி. 12:1-31) இந்த அற்புதமான அனுபவம் மீட்படைந்த (மறுபடியும் பிறந்த) அனுபவத்திற்கு வேறுபட்டதாகவும் அதனைப் பின்தொடருகிறதாகவும் இருக்கின்றது. (அப். 10:44-46, 11:14-16, 15:7-9.) பரிசுத்த ஆவியானவர் ஆள் தத்துவமுள்ளவர்.  பிதாவோடு சமமானவர்.

8. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அடையாளங்கள்:
பரிசுத்த ஆவியின் பரிபூரண அபிஷேகமானது, விசுவாசிகளில் சரீரப்பிரகாரமாக ஆவியானவர் அருளின வரங்களின்படி அந்நியபாஷை பேசுவதாலும், தூய்மையும், பரிசுத்தமும், அன்பும் நிறைந்த கனிதரும் ஜீவியத்தினாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. (கலா. 5:22-23) மேலும் பகிரங்க சாட்சிகளிலும், ஊழியத்திலும் ஆவியின்  வல்லமை வெளிப்படும்.  (அப். 1:8, 2:4, 2:42-43, 10:44-46; 19:2-6.)

9. திருச்சபை:
திருச்சபை கிறிஸ்துவின் சரீரமாகும். தேவன் தமது ஆவியின்மூலம் வாசம் செய்யும் ஸ்தலம். தேவநியமத்தின்படி ”பிரதான கட்டளையை” நிறைவேற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம். ஆவியினால் பிறப்பிக்கப்பட்டு, தண்ணீரினால் முழுக்கு ஞானஸ்நானம் பெற்று பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் முதற்பேறான சபையிலும் பொதுச்சபையிலும் ஒருங்கிணைத்த அங்கத்தவராகக் காணப்படுவர்.
(அப். 2:38-41,  எபே.1:22-23, 2:22,  எபி. 12:23.)

10. ஆசீர்வாதமான நம்பிக்கை:
கிறிஸ்துவிற்குள் நித்திரை அடைந்தவர்கள் உயிர்த்தெழுந்து, கிறிஸ்துவின் வருகை பரியந்தம் உயியோடிருந்து மறுரூபமாக்கப்படுபவர்களோடு கூடச்சேர்ந்து கிறிஸ்துவைச்சேர்வதே சீக்கிரம் சம்பவிக்கப்போகிறதான ஆசீர்வாதமான நம்பிக்கையாகும்.
(ரோமர். 8:23,  1 கொரி. 15:51-52,   1 தெச. 4:16-19,  தீத். 2:13.)

11. அக்கினிக் கடல்:
பிசாசும், அவனின் தூதரும், மிருகமும், கள்ளத் தீர்க்கதரிசியும், ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத யாவரும் சதாகால தண்டனையாகிய கந்தகம் எரிகிற  அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம் எனப்படும்.
(வெளி. 19:20,  20:10-15.)

12. புதியவானங்களும், புதிய பூமியும்:
”நாம் அவர் வாக்குத்தத்தின்படியே நீதி வாசம் செய்கிற புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாயிருக்குமென்று காத்திருக்கின்றோம்”
(2 பேதுரு. 3:13.)

13. விவாகம்:

அ) விசுவாசிக்கும் அவிசுவாசிக்குமிடையிலான விவாகம் வேதத்தின்படி அங்கிகரிக்கப்படவில்லை, தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சபையிலே வேதப் பிரமாணத்தின்படி விசுவாசிக்கும் விசுவாசிக்குமிடையில் மாத்திரமே விவாகம் செய்துவைக்கப்படும். ( 2 கொரி. 6:14.)
        

ஆ) விவாகரத்தும் மறுமணமும்:
1 கொரி. 7ம் அதிகாரம், மத்தேயு. 19:1-12 வசனங்களின்படியும் கையாளப்படும்.